புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் எம்பி நேற்று காமராஜர் நகர் தொகுதி முழுவதும் திறந்த வேனில் வீதி வீதியாக சென்று கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். சில நாட்களாக புதுவையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் வெங்கட்டா நகர் 2வது குறுக்கு தெரு மற்றும் வள்ளலார் சாலை சந்திப்பு அருகே காலை 11.10 மணியளவில் வந்தபோது, வைத்திலிங்கம் எம்பி திடீரென மயங்கி விழுந்தார்.
உடனே அவரை அருகில் இருந்த வைத்தியநாதன் எம்எல்ஏ மற்றும் கட்சி நிர்வாகிகள் தாங்கி பிடித்து கொண்டனர். பின்னர், அருகில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்துச்சென்று அவரை ஓய்வு எடுக்க வைத்தனர். சிறிது நேரத்தில் மருத்துவர் வரவழைக்கப்பட்டு வைத்திலிங்கம் எம்பிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, அவருக்கு லோ சுகர் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவர் பிரசாரத்தின் போது, அடிக்கடி தண்ணீர் மற்றும் பழச்சாறு எடுத்து கொள்ளுமாறு அறிவுரை கூறினார். தொடர்ந்து, அவர் 20 நிமிடம் ஓய்வுக்கு பிறகு உடைகளை மாற்றிக் கொண்டு மீண்டும் பிரசாரத்தில் ஈடுபட்டு கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.
The post பிரசாரத்தில் மயங்கி விழுந்த காங்கிரஸ் வேட்பாளர் appeared first on Dinakaran.